ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமாதவ, ஸ்ரீயோகநரசிம்மப் பெருமாள் திருக்கோயில், வல்லம் (தஞ்சாவூர் மாவட்டம்)
ஸ்ரீமாதவப் பெருமாள்; ஸ்ரீயோக நரசிம்மர்; ஸ்ரீகமலவல்லித் தாயார்; உற்சவர் ஸ்ரீதேவாதி ராஜன்; கௌதம தீர்த்தம்.
வழி: வல்லம் தஞ்சாவூருக்குத் தென்மேற்கில் சுமார் 12 கீ.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலை NH83-ஐ ஒட்டி அமைந்துள்ளது. கீழே உள்ள தேசிய வரைபடம் (map) காண்க.
📍 வரைபடம் (map) – ஸ்ரீமாதவ யோக நரசிம்மர், வல்லம்
பராபவ வருடக் கார்த்திகை மாத விஷ்ணுபதி புண்ணியகால வைபவம் வல்லத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனாய ஸ்ரீமாதவப் பெருமாள் மற்றும் யோக நரசிம்மர் திருக்கோயிலில் 16 நவம்பர் 2026 அன்று இறையருளால் நடைபெறவுள்ளது. பக்தகோடிகள் அனைவரும் வந்து, விஷ்ணுபதி புண்ணியகால உற்சவத்தில் பங்கேற்று, இறைவனின் ஆசிகளைப் பெற்று, ஆன்மீகத்தில் மேன்மை பெறுவோமாக.
கௌதம முனிவர் ஆசிரமம், விநாயகர் திருவிளையாடல்
சப்த ரிஷிகளில் ஒருவரான கௌதம முனிவர், வனப்பகுதி ஒன்றில் ஆசிரமம் அமைத்து, நியதிகள் தவறாமல் இறைவழிபாடு செய்து வந்தார்.
தமது தவ வலிமையால் முனிவர் உருவாக்கிய கிணறு, கோடையிலும் வற்றாமல் நீர் நிறைந்து காணப்பட்டது. அக்கிணற்றில் நீர் எடுக்க வந்த சிலர், நீரை மாசுபடியச் செய்ததால், அவர்களை கௌதமர் கடிந்துகொண்டார்.
இதனால் அவர்கள் முனிவர் மீதுப் பொறாமை கொண்டு, அவரை ஆசிரமத்தை விட்டு விரட்ட எண்ணி, விநாயகப் பெருமானை வேண்டி வழிபட்டனர்.
அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, வயதான இரு பசுக்களின் வடிவில் விநாயகர் அங்கு தோன்றினார். அப்பசுக்கள் கௌதம முனிவர் ஆசிரமத்தின் அருகே பயிரிட்டிருந்த வயலில் புகுந்து மேய்ந்தன.
அதைக் கண்ட கௌதமர், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்துப் பசுக்களை விரட்டினார். உடனே பசுக்களின் உடம்பில் இருந்து விநாயகர் வெளியேற, அந்த இரு பசுக்களும் இறந்ததைப் போலக் கீழே சுருண்டு விழுந்தன.
இதனைக் கண்ட பொறாமைக்காரர்கள், கௌதமர் கோஹத்தி (பசுவதைப் பாவம்) செய்ததாகக் கூறி அவரை ஆசிரமத்தை விட்டு விரட்டினர்.
சிவபெருமான் ஆசி, தேவேந்திரன் வழிபாடு
தமக்கு நேர்ந்த பாவம் தொலைய ஈசனை நோக்கி கௌதமர் கடுந்தவம் புரிந்தார். அவருக்குக் காட்சி தந்த சிவபெருமான், முனிவர் எப்பிழையும் செய்யவில்லை என்று கூறி ஆசி வழங்கினார். மேலும், விரைவில் அவரது ஆசிரமத்திற்கு நரசிம்மப் பெருமாள் எழுந்தருள்வார் என்றும் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.
ஈசனின் அருளால் மன நிறைவோடு ஆசிரமம் திரும்பிய கௌதமர், அங்கு வீற்றிருந்த மாதவப் பெருமாளை மனமுருகி வழிபட்டு வந்தார். இந்த மாதவப் பெருமாள் திருவுருவம் தேவேந்திரனால் முனிவருக்கு அளிக்கப்பட்டதாகும்.
முன்னொரு காலத்தில் முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியுடன் தேவேந்திரன் பலன் என்னும் அசுரனை வென்றான். ஆனால், முசுகுந்த சக்கரவர்த்திக்குத் தியாகேசர் வடிவைத் தருவதாகக் கூறி ஏமாற்றியதால் இந்திரனைப் பாவம் சூழ்ந்தது.
அப்பாவம் நீங்க ஈசனைத் துதித்த இந்திரனிடம் சிவபெருமான், பெருமாளைத் துதிக்குமாறு வழிகாட்டினார். அதன்படி பூஜிக்க உகந்த தலத்தைத் தேடி வந்த இந்திரன், கௌதமர் ஆசிரமம் அமைந்திருந்த வனத்தில் எழுந்தருளியிருந்த ஒரு பெருமாள் விக்கிரகத்தைக் கண்டு ஆராதித்துப் பாவ விமோசனம் பெற்றான்.
பின்னர், தான் ஆராதித்த அந்தப் பெருமாள் விக்கிரகத்தைக் கௌதம முனிவரிடம் அளித்துச் சென்றான். தேவாதிராஜனான இந்திரன் வழிபட்டதால் இப்பெருமாள் தேவாதிராஜன் என்றே அழைக்கப்பட்டார்.
கௌதம முனிவர் அப்பெருமாளைத் தமது ஆசிரமத்தில் வைத்து மாதவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் விசேஷமாக வழிபட்டு வந்தார்.
வல்லாசுரன் வதம், யோக நரசிம்மர் வருகை
சிவபெருமான் ‘நரசிம்மர் வருவார்’ என்று முனிவரிடம் கூறிய வார்த்தைகள் பலிக்கும் காலம் வந்தது.
இரணியனை வதம் செய்த பின்னர், அசுரர்களின் பிடியிலிருந்து அகிலத்தைக் காத்திட வலம் வந்த திருமால், வல்லாசுரன் என்ற அரக்கன் மக்களைத் துன்புறுத்துவதை அறிந்தார்.
வல்லாசுரன் தங்கியிருந்த கோட்டையை அழித்து அவனையும் வதம் செய்த பின்னர், நரசிம்மப் பெருமாள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து யோக நிலையில் அமர்ந்தருளினார்.
மாதவப் பெருமாளையும் நரசிம்மரையும் ஒருங்கே தரிசித்த தேவர்களும் முனிவர்களும் இந்தத் தலத்திலேயே தங்கித் தங்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க, இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார்.
நரசிம்மரால் வதம் செய்யப்பட்ட வல்லாசுரன் மரணத் தருவாயில் கேட்ட வரத்தின்படியே, இவ்வூர் அவனது பெயரால் வல்லம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தல வழிபாட்டுப் பலன்கள்
ஆண்டாள் நாச்சியாரின் வழிகாட்டுதல்: “மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்” என்று திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியாரே மாதவனின் திருநாமத்தைப் போற்றிப் பாடச் சொல்லியுள்ளார். இத்தலத்துப் பெருமாளை ‘மாதவா! மாதவா!’ என்று விளித்து, அத்திருநாமத்தை 1008 முறை உச்சரித்தபடி வலம் (பிரதட்சணம்) செய்துத் தூய பக்தியோடு வழிபட்டால், நாம் கேட்ட வரங்கள் அனைத்தையும் அந்த எம்பெருமான் அருள்வார்.
திருமணப் பிராப்தி, மகிழ்ச்சியான இல்லறம்: மகிழ்ச்சியானத் திருமண வாழ்க்கை அமைய வேண்டுவோர், தம்பதி சமேதராக இங்கு வந்துப் பெருமாளைத் தரிசித்து, தங்கள் கைகளால் தொடுத்த நறுமண மலர் மாலைகளைப் பெருமாளுக்கும் தாயாருக்கும் சார்த்தி வழிபட வேண்டும். இதனால் ஆன்மீகம் கலந்த மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும். திருமணம் கைகூடக் காத்திருப்போரும் இவ்வாறு செய்வதால் விரைவில் கல்யாணப் பிராப்தி ஏற்படும்.
திருவாய்மொழி பாராயணச் சிறப்பு: ஆண்டவனின் ஒவ்வொரு திவ்விய நாமத்திற்கும் ஒரு தனித்துவமான பலன் உண்டு. “மாதவன் என்றென்று ஓத வல்லீரேல், தீதொன்றும் அடையா ஏதம் சாராவே” என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் அருளியுள்ளார். அதாவது, மாதவன் என்ற திருநாமத்தை உச்சரித்தால் எவ்விதத் தீங்கும் வராது; எந்தப் பாவமும் உங்களை நெருங்காது.
அடியார்கள் இத்தலத்திற்கு வந்து நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியைப் பாராயணம் செய்வது சிறப்பு. திருவாய்மொழியை ஓதுவது சாம வேதத்தை ஓதுவதற்கு இணையான பலனைத் தரும். முழுமையாக ஓத இயலாதவர்கள், அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாசுரங்களைக் கொண்ட சிறிய தொகுப்பான கோயில் திருவாய்மொழியைப் பாராயணம் செய்யலாம்.
நோய் நிவாரணம்: மேலும், ஸ்ரீமாதவப் பெருமாள் மூல நோய் (piles) மற்றும் இதர குதம் சார்ந்த நோய்களுக்குச் சிறந்த நிவாரணத்தையும் அளித்தருள்கிறார்.
ஸ்ரீயோக நரசிம்மர் வழிபாட்டுப் பலன்கள்
இத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மரைத் தரிசித்து, லக்ஷ்மி நரசிம்ம கரவலாம்பத் தோத்திரம் படித்து, ஏழைகளுக்குப் பானகம் தானம் செய்வதால் கீழ்க்கண்ட நற்பலன்கள் கிட்டும்:
- வாழ்வில் எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையில் சிக்கித் தவித்தாலும், நரசிம்மர் ஓடி வந்து ரட்சித்துக் காப்பாற்றுவார்.
- குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு நல்வழி காட்டி அருள்புரிவார்.
- இங்கு எள்ளோதரையைத் தானமாக அளித்து வரும் பக்தர்களின் பித்ரு தோஷத்தை நிவாரணம் செய்தருள்வார் இத்தலத்து யோகநரசிம்மர்.
- “உமது திருவடித் தாமரைகளைத் தவிர வேறொன்றும் தேவையில்லை” என்று பரிபூரணமாகச் சரணடையும் பக்தர்களுக்கு, அளப்பரிய பக்தி சாம்ராஜ்யத்தையே வாரி வழங்குவார்.
- நரசிம்மரே நீராடியத் தீர்த்தம் என்பதால் பல அதீத சக்திகளைக் கொண்டதே இங்குள்ள தீர்த்தம். பிரதோஷ காலம், பௌர்ணமி மற்றும் சதுர்த்தசித் திதிகளில் இங்கு தீர்த்த வலம் ஆற்றுவது மிகவும் விசேஷமாகும். தீர்த்த வலம் ஆற்றும் போது ஓத வேண்டிய திருவாய்மொழிப் பாசுரம்:
“ஆடி ஆடி அகம் கரைந்து
இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே.”
★★
வாங்கிப் படியுங்கள்